டெல்லி: மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா நாடு முழுவதும் 1.8 மில்லியன் பெண்களுக்கு பெரிதும் உதவக்கூடும் என்று தெரிகிறது:
மசோதாவின் முக்கிய அம்சங்களாவன:
* நிறுவனங்களில் பணிப்புரியும் பெண்களுக்கு 12 வாரம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது . இந்த கால அளவை 26 வாரங்களாக (6 மாதம்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
* 3 மாதங்களுக்கு குறைந்த குழந்தையை தத்து எடுக்கின்ற தாய்மாருக்கும் மகப்பேறு விடுப்பு 12 வாரங்களாக இருக்கும்.
* 10 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். இரண்டு குழந்தைகளுக்கு மேலான மகப்பேறு விடுமுறை தற்போதைய 12 வாரங்களாகவே தொடரும்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று துவங்கியது. இந்த கூட்டத்தில் பேறுகால பலன்கள் சட்டதிருத்த மசோதா 2016 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை தாக்கல் செய்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறும்போது, " நிறுவனங்களில் பணிப்புரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 18 லட்சம் பெண் பணியாளர்கள் பயனடைவார்கள்" என்றார்.