கர்ப்ப காலத்தில் செய்யப்படும் முக்கிய பரிசோதனைகள்..!
கருமுட்டை உருவாகியதை உறுதிப்படுத்தும் முதல் ஸ்கேன் சோதனை மாதவிடாய் நின்ற முதல் 30 நாட்கள் முடிந்த பிறகு கண்டறியப்படும்.
கர்ப்ப காலத்தின் 3-வது மாதத்தில் குழந்தையின் இதயதுடிப்பு உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என்பதை கண்டறியப்படும் . 5-6 வது மாதங்களில் மிக முக்கிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதில், குழந்தையின் உருவம், உறுப்புகளின் வளர்ச்சி, இதயம், மூளை, நுரையீரல் போன்றவற்றில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, 8-வது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி, தொப்புள் கொடி, நஞ்சு அமைப்பு, குழந்தையின் இரத்த ஓட்டம், குழந்தையின் நிலை போன்றவை கண்டறியப்படுகிறது.
இதற்கு இடையில், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஸ்கேனில் குழந்தையின் இதயத்துடிப்பின் எண்ணிக்கை, குழந்தையின் எடை ஆகியவற்றை மருத்துவர்கள் பரிசோதனை செய்கின்றனர். மேலும், HCG உள்ளிட்ட சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
கருவுற்ற பெண் சத்து குறைபாட்டோடு இருந்தால் அதற்குரிய மருந்து மாத்திரைகளை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால், மருத்துவரின் அனுமதியின்றி சுயமாக மாத்திரைகள் எடுக்க கூடாது.
ஏனெனில், சில நேரங்களில் தாய் மற்றும் சேய் இருவருக்கும் அது ஆபத்தை உண்டாக்கிவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறனர்.
அதேபோல, கருவுற்ற பெண்களின் உடல் எடை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஆனாலும், கருவுற்ற பெண்ணின் கர்ப்பகாலம் வரை 9 – 10 கிலோ எடை வரை அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மருத்துவரின் ஆலோசனையோடு ஒவ்வொரு மாதமும் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்றவற்றை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தின் முக்கிய பரிசோதனைகளாக பாலின நோய், ஹெச்ஐவி நோய்த்தொற்று, மஞ்சள் காமாலை, தைராய்டு, இரத்த சோகை, சிறுநீரில் உப்பு, புரத அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஹீமோகுளோபின் குறைபாடுகளை தவிர்க்க கீரை, உலர்பழங்கள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை தவிர கருப்பையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதற்குரிய பரிசோதனைகளை எடுக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
இந்த பரிசோதனைகள் அனைவருக்கும் பொதுவானது என்றாலும், கருவுற்ற பெண்ணின் உடல் தன்மையை கொண்டே அடுத்தடுத்த பரிசோதனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எனவே, தேவையின்றி சுயமாக இந்த சோதனைகளை செய்ய கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.