அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்கான பொது மக்களின் பிரபலமான விருப்பமாக உள்ளன.
ஏப்ரல் 1, 2023 முதல், தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) அதாவது NSC உட்பட, தபால் அலுவலகத்தின் (Post Office) பல சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
இப்போது NSC -இல் முதலீட்டாளர்களுக்கு 7.7% வட்டி விகிதம் கிடைக்கிறது. NSC, தபால் அலுவலகத்தின் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
எந்தவொரு தபால் அலுவலக கிளைக்கும் சென்று இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். NSC திட்டத்தில் முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் காம்பவுண்டிங் இண்ட்ரஸ்ட் அதாவது கூட்டு வட்டியின் பலனைப் பெறலாம்.
NSC -இல் NSC VIII, அதாவது எட்டாவது வெளியீடு 5 வருட லாக்-இன் காலத்துடன் வருகிறது. இந்த திட்டத்திற்கு 7.7% வருடாந்திர வட்டி (Interest Rate) கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் வட்டித் தொகையுடன் சேர்த்து அசல் தொகையையும் பெறுவார்கள்.
முதல் நான்கு ஆண்டுகளில் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ஆரம்ப முதலீடு மற்றும் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும். இதில் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டில் விலக்கு கிடைக்கும்.
NSC இல் உங்கள் முதலீடு முதிர்ச்சியடையும் போது, அதாவது மெச்யூரிட்டியின் போது, நீங்கள் அதை ரொக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்தத் தொகையை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதியையும் தேர்வு செய்யலாம்.
இந்தப் பணத்தை வித்ட்ரா செய்யாமல், அதை என்எஸ்சி கணக்கிலேயே (NSC Account) இருக்க விட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தில் அந்த தொகைக்கு வட்டி கிடைக்கும்.