இந்தியாவில் பிட்காயின் எதிர்காலம் என்ன?
சமீபத்திய ஆண்டுகளில் உலக அளவில் கிரிப்டோகரன்சி சந்தை எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதில் பிட்காயின் மிக முக்கியமான அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் நாணயமாக முன்னிலை வகிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், இந்தியா அதன் மக்கள் தொகை, வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் மாறிவரும் நிதிநிலை போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
கிரிப்டோ கரன்சிகளுடனான இந்தியாவின் உறவை முறையாக யாராலும் சொல்ல முடியாது. ஒரு காலத்தில் கிரிப்டோ கரன்சியில் இந்தியர்கள் ஆர்வம் காட்டினர். பின்னர் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளால் அதில் சரிவு ஏற்பட்டது.
2018 ஆம் ஆண்டு RBI கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களுக்கு நிதி நிறுவனங்கள் சேவை வழங்குவதைத் தடை செய்தது. இந்த நடவடிக்கையால் டிஜிட்டல் நாணயங்களில் முதலீடு செய்ய விரும்பும் தனிநபர்கள் மற்றும் வணிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின
இருப்பினும் 2020 மார்ச் மாதம் இந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதால் கிரிப்டோ கரன்சி முதலீடு இந்தியாவில் எழுச்சி கண்டது. டிஜிட்டல் சொத்துக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றும் தளங்கள் உருவாகின.
மேலும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கிரிப்டோகரன்சிகள் பலரது கவனத்தை ஈர்த்தது. பிளாக் செயின் மற்றும் கிரிப்டோ கரன்சிகளின் திறனை உணர்ந்த அரசாங்கம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக அவற்றின் நன்மைகளை ஆராய நடவடிக்கை எடுத்தது.
இதற்காக 2019 ஆம் ஆண்டிலேயே குழு அமைக்கப்பட்டு, அனைத்து விதமான கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்து ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்படும் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்ய வரைவு மசோதா ஒன்றை முன்மொழிந்தது. ஆனால் இது சட்டமாக இயற்றப்படவில்லை.
2020 பிற்பகுதியில் கிரிப்டோ கரன்சி சொத்துக்களை வகைப்படுத்தி அவற்றின் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவை அறிமுகம் செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிக்கைகள் வெளிவந்தன.
பின்னர் 2022 ஏப்ரல் மாதத்திலிருந்து கிரிப்டோ கரன்சியில் வரும் லாபத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது. அதன் பிறகு இந்தியாவில் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வம் பெருமளவு குறைந்துவிட்டது.
இந்தியாவில் பிட்காயினின் எதிர்காலம்: கிரிப்டோகரன்சி என்றாலே அதில் பிட்காயின் மீதுதான் மக்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். இந்தியாவில் பிட்காயினின் எதிர்காலம் கிரிப்டோ கரன்சிகளை எந்த அளவுக்கு இந்தியா ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.
இதற்காக ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பை நோக்கி அரசாங்கம் நகரும்போது, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியம்.
எனவே இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளின் எதிர்காலத்தை இப்போதே நாம் கணித்து கூறிவிட முடியாது. அதன் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பான பரிமாற்றமுறை நன்றாக இருந்தால் மட்டுமே, பிட்காயின் உள்பட எல்லா கிரிப்டோகரன்சிகளும் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும்.